×

சித்திரை விஷூ, தமிழ் புத்தாண்டையொட்டி கூடலூர் பகுதியில் தட்டை பயிறு அறுவடை தீவிரம்

கூடலூர்: கேரளாவில் சித்திரை விஷூ மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி கூடலூர் பகுதியில் தட்டைபயிறு மற்றும் பாகற்காய் அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கூடலூர் சுற்றுவட்ட பகுதி விவசாயிகள் கோடைகால பயிர்களாக பாகற்காய், மேரக்காய், தட்டைப்பயிறு, பஜ்ஜி மிளகாய், நேந்திரன் வாழை உள்ளிட்டவற்றை பயிர் செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் இந்த வகை காய்கறிகளுக்கு கேரளாவில் அதிக சந்தை வாய்ப்புகள் உள்ளன. தற்போது கேரளாவில் விஷூ பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி கூடலூர் பகுதி விவசாயிகள் பாகற்காய் தட்டைப்பயிறு உள்ளிட்டவற்றை அறுவடை செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலங்களில் ஓரளவு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் லாபம் அடைந்து வருகின்றனர். அரை ஏக்கர் முதல் 3 ஏக்கர் வரையிலான தங்களது சொந்த விவசாய நிலங்களில் சிறுகுறு விவசாயிகள் காய்கறி வகைகளை பயிரிடுகின்றனர். கோடைகால காய்கறி பயிர்கள் உற்பத்தி செய்வதற்கான ஆலோசனை, பயிற்சிகள் மற்றும் இயற்கை முறை வேளாண்மை குறித்தும் தோட்டக்கலைத்துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு உற்பத்தியாகும் காய்கறி வகைகள் உள்ளூர் மொத்த வியாபாரிகள் மூலம் விவசாயிகளிடம் பெறப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி சந்தைப்படுத்தப்படுகிறது. இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘பெரும்பாலும் தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில் கோடைகால காய்கறி பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படும் காய்கறிகளுக்கு சரியான விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் இயற்கை முறைக்கு மாறுவதை தவிர்த்து ரசாயன இடுபொருட்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. தட்டைப்பயிறு விவசாயத்தில் நடவு செய்து குறைந்த பட்சம் 2 மாதத்தில் இருந்து அறுவடையை துவக்கலாம். அறுவடை துவங்கியதில் இருந்து 1 முதல் ஒன்றரை மாதங்கள் வரை செடிகளில் இருந்து தரமான தட்டை பயிறு கிடைக்கும். கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்சம் 20 ரூபாய் வரை கிடைத்தால் தான் செலவு மற்றும் வேலையாட்கள் கூலி என சமாளிக்க முடியும். தற்போது பண்டிகை காலம் என்பதால் தங்களை உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். கூடலூர் பகுதியில் உற்பத்தியாகும் தட்டைப் பயிருக்கு தற்போது அதிகபட்சமாக கிலோ 40 ரூபாய் வரை கிடை க்கும் என விவசாயிகள் நம்பிக் கை தெரிவித்துள்ளனர்.

The post சித்திரை விஷூ, தமிழ் புத்தாண்டையொட்டி கூடலூர் பகுதியில் தட்டை பயிறு அறுவடை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Gudalur ,Chitrai ,Tamil New Year ,Kudalur ,Kerala ,Chitrai Vishu ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன்...